Archives: நவம்பர் 2024

ஒரு நன்றியுளள்ள மறுமொழி

தீமோத்தேயு என்ற ஆஸ்திரேலிய மாலுமி பச்சையான மீன் மற்றும் மழைநீர் இவற்றைக் கொண்டே மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். பசிபிக் பெருங்கடலில், நிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில், புயலால் உருக்குலைந்த தனது கட்டுமரத்தோடு ஒரு தீவில் தனியாகச் சிக்கிக்கொண்டார். ஆனால், மெக்சிகன் நாட்டு டுனா படகின் ஊழியர்கள், மோசமாகச் சேதமடைந்திருந்த  அவரது படகைக் கண்டு, அவரை மீட்டனர். பின்னர், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு மெலிந்திருந்த அவர், "என் உயிரைக் காப்பாற்றிய கப்பல் தலைவருக்கும் மீன்பிடி நிறுவனத்திற்கும்  நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!" என்றார்.

தனது மிகவும் விரும்பத்தகாத அனுபவத்திற்குப் பின்னர் தீமோத்தேயு நன்றி கூறினார். ஆனால் தீர்க்கதரிசி தானியேல், ஒரு நெருக்கடிக்கு முன்னும், பின்னும், அதின் மத்தியிலும் தனது நன்றியுள்ளத்தை வெளிக்காட்டினார். மற்ற யூதர்களுடன் யூதாவிலிருந்து பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன (தானியேல் 1:1-6) தானியேல் மேலான அதிகாரத்திற்கு உயர்ந்தார். ஆனாலும் அவரைக் கொல்ல விரும்பும் மற்ற தலைவர்களின்  அச்சுறுத்தல் இருந்தது (6:1-7). அவருடைய எதிரிகள், பாபிலோன் ராஜாவிடம் சென்று, "ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும்" நோக்கி எவன் விண்ணப்பம்பண்ணினாலும் , "அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட" (வ. 7) ஆணையில் கையெழுத்திடச் செய்தனர். ஒன்றான மெய்தேவனை நேசித்து, சேவித்த மனிதனாகிய தானியேல் என்ன செய்வார்? அவர் “முன் செய்துவந்தபடியே , . . . தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வ. 10). அவர் நன்றி செலுத்தினார், மேலும் தேவன் அவரது உயிரைக் காப்பாற்றி, அவருக்கு கனத்தைக் கொடுத்து (வ. 26-28) அவரது நன்றியுள்ள உள்ளத்திற்கு வெகுமதி அளித்தார்.

அப்போஸ்தலன் பவுல் எழுதியது போல், "எஎல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்(ய)யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:18) தேவன் நமக்கு உதவுவாராக. நாம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோமோ அல்லது அதிலிருந்த மீண்டு வந்தோமோ, நன்றியுடன் கூடிய பிரதிபலன் அவரைக் கனப்படுத்துகிறது, மற்றும் நம் விசுவாசம் நிலைக்க உதவுகிறது.

தடை உத்தரவு

நீதிமன்றத்தில், ஒரு நபர் தேவனுக்கு எதிரான தடை உத்தரவிற்காக மனுத்  தாக்கல் செய்தார். தேவன் தன்னிடம் குறிப்பாக இரக்கமற்றவராகவும், கடுமையான எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தலைமை நீதிபதி, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நபருக்கு நீதிமன்றத்தின் உதவி அல்ல, மாறாக அவருக்கு மனநல உதவி தேவை என்று கூறினார். இது ஒரு நகைச்சுவையான உண்மைக் கதை, ஆனால் சோகம் நிறைந்தது.

நாம் என்ன விதிவிலக்கானவர்களா? நமக்கும் சில சமயங்களில், "எனக்கு போதும் தேவனே, தயவாய் நிறுத்தும்" என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? இதையே யோபு செய்தார். அவர் தேவனை வழக்கிற்குட்படுத்தினார். சொல்லொண்ணா துயரங்களைத் தனிப்பட்ட முறையில் சகித்த பிறகு, யோபு, "தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்" (யோபு 13:3) என்கிறார், தேவனோடு நீதிமன்றத்தில் வழக்காடுவதைக் கற்பனை செய்கிறார் (9:3). "உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக" (13:21) என்று அவர் ஒரு தடை உத்தரவையும் போடுகிறார். தான் குற்றமற்றவர் என்பது மட்டும் யோபின் வழக்கு வாதம் அல்ல, ஆனால்,"நீர் என்னை ஒடுக்கி.. பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?" (10:3) என்று தேவன் தன்னிடம் நியாயமற்ற கடுமையோடு இருப்பதாகப் பார்த்தார்.

சில சமயங்களில் தேவன் நியாயமற்றவர் என்பதுபோல உணர்கிறோம். உண்மையில், யோபின் கதை சிக்கலானது, எளிதான பதில்கள் அதிலில்லை. இறுதியில் தேவன் யோபுக்குண்டான அனைத்தையும் மீட்டெடுக்கிறார், ஆனால் அது எப்போதும் நமக்கான அவரது திட்டம் அல்ல. யோபுவின் இறுதி ஒப்புதலில் சில தீர்ப்பை நாம் காணலாம்: "ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்" (42:3). கருப்பொருள் யாதெனில், நாம் அறியவே முடியாத காரணங்கள் தேவனிடம் உள்ளன, அதில் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது.

தேவனால் மன்னிக்கப்படுதல்

தேசிய விடுமுறையான நன்றிசெலுத்தும் நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி கருணை மன்னிப்பு வழங்கும் முன், இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறார். நன்றியறிதல் நாளுக்கான பாரம்பரிய உணவில் பிரதானமாக வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை தங்கள் ஆயுளெல்லாம் பாதுகாப்பாக ஒரு பண்ணையில் வளர்கின்றன. வான்கோழிகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான இந்த வருடாந்திர பாரம்பரியமானது, மன்னிப்பிலுள்ள ஜீவனளிக்கும் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

எருசலேமில் மீந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை எழுதியபோது, ​​மன்னிப்பின் முக்கியத்துவத்தைத் தீர்க்கதரிசி மீகா புரிந்துகொண்டார். தீமையை விரும்பி; பேராசை, அநீதி மற்றும் கொடுமையில் ஈடுபட்டதற்காக (6:10-15) ஒரு சட்டப்பூர்வமான புகாரைப் போலவே,தேவன்  தேசத்திற்கு எதிராக சாட்சியமளிப்பதை மீகா பதிவு செய்தார் (மீகா 1:2).

இத்தகைய கலகங்கள் மத்தியிலும், தேவன் என்றென்றைக்கும் கோபமாக இரார், மாறாக "அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னி(ப்பார்)க்கிற" (7:18) என்ற வாக்கில் வேரூன்றிய நம்பிக்கையுடன் மீகா முடிக்கிறார். சர்வத்திற்கும் சிருஷ்டிகரும் நியாயாதிபதியுமாக, ஆபிரகாமுக்கு அவர் அளித்த வாக்கின் பொருட்டு (வ. 20) நமக்கு எதிரிடையாக நம்முடைய செயல்களை அவர் கணக்கிட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அவராலேயே அறிவிக்க முடியும். இறுதியில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இது நிறைவேற்றப்பட்டது.

தேவனுடைய தரத்திற்கேற்ப வாழத் தவறிய எல்லா வழிமுறைகளிலிருந்தும் மன்னிக்கப்படுதல் என்ற பரிசுக்கு நாம் பாத்திரர் அல்லவே, எனினும் இது நமக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அவருடைய முழுமையான மன்னிப்பின் பலன்களை நாம் மேலும் மேலும் புரிந்து கொண்டு, ​நன்றியறிதலுடன் அவரை துதிப்போமாக.

கிறிஸ்துவின் ஒளி பிரகாசமாக ஒளிர்கிறது

மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ​​ஒளிக்கு மற்றொரு  மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். "இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்" என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.

நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.

கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (வ.7) என்று குறிப்பிட்டார்.

இயேசுவே தன்னை, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.